Tuesday, October 18, 2016

நண்டு

நம் நட்பின் ஆழம் கேட்டாய்
ஆழ்கடல் என்றேன்!
நம் நட்புக்கு உவமை கேட்டாய்
நண்டுப்பிடி என்றேன்!
நம் நட்பின் ஆயுள் கேட்டாய்
உலகம் உய்யும் வரை என்றேன்


இத்தனை வினாக்களுக்கும்
விடை பகர்ந்த நான்,
உன் உள் வாயில் ஊறும்
இரத்தம் பற்றி....
அடிக்கடி வரும்
இருமல் பற்றி...
வாட்டி வதைக்கும்
தலை வலி பற்றி...
கேட்டபோது
இன்றைய உலகின்
தலை வலியே
இது தான் என்றாய்

புரியாமல் விளித்தேன்...
புரியும்படி கூறடி என்றேன்
எனக்கு நண்டு என்றாய்
உன் புதிரான பதிலை
புரியாத நானும்
சென்று விட்டேன்
என்வழியே...

என்னையே எனக்களித்தவளே..
என்னுயிர் தோழியே...

உன் மறைவுக்குப் பின் தான்
புரிந்து கொண்டேன்

நண்டு என்றால் கென்சர் என்று...!!!


இளைய நிலா
நன்றி :நவமணி
06/09/98




நான் என்றால் அது நான் மட்டும் அல்ல!

கனவு காணவும்
கதியற்றுப் போனவளாய்
நான்...
நனவுகளில்
இறைவனின்
சோதனைச் சாவடிக்குள்
துன்பப் புழுவாய்
துவண்டு கொண்டிருக்கிறது
என் வாழ்க்கை!


போதுமே இந்த
சோதனையும்-வேதனையும்
என உள்ளம்
குமுற ...குமுற....
சோதனைச் சட்டிகள்
ஒன்றன் மேல் ஒன்றாக
என் தலை மேல்
ஏற்றப்படுகிறது.


அவற்றை இறக்கி
 வைப்பதற்காய்
என்னோடு போராடும்
என்னைச் சூழவுள்ள
எனது 'நான்'கள்


என் ஒவ்வொரு
அசைவையும்
அழகு பார்த்து- எனை
உதரத்தில் சுமந்து
இன்னும் என்னை
மனதில் சுமக்கும்
உத்தமியும்.......


என்றும் எனக்கு
துணையாகி
எதிலும் துணையாகி
வழி நெடுகிலும்
விழி வைத்து
ஒளி காட்டும்
எந்தையும்....

நான் சிரிக்கும் போது
சிரித்து....
அழும் போது
அழுது...
என்னோடு துவண்டு
துடித்து கருகிப் போகும்
என் உடன் பிறப்புக்களும்....

எனை கரம் பிடித்த
நாள் முதல்
எனக்கே எனக்காகி
ஒன்றாடி உறவாடி
என் உயிராகிப் போன
என்னவரும்...

என் பெண்மைக்கே
மேன்மை சேர்த்து..
'அம்மா' எனும்
மகுடம் தந்து...
என் பிறப்புக்கான
பெருமையை  தேடித்தந்த
என் உதரத்தில் மலர்ந்த
என் குட்டி பிரபஞ்சமும்...


இன்னும்...
உற்றாராய்
உறவாராய்
அன்பாய்
நட்பாய்
பல பலவாய்...........


எனைச் சூழ எனது 'நான்'கள்-எனக்கான
பிரார்த்தனை பெட்டகங்களுடன்......


நான் எனும் நான் வாடிப்போனால்.....
என்னைச் சூழ உள்ள
இந்த 'நான்'கள்
கருகிப்போகும்
அந்த 'நான்'களுக்காகவாவது
என்னை இன்னும்
கொஞ்சம் வாழ விடுவாயக!!!!

'இளைய நிலா'