Tuesday, February 5, 2019

பயம்

விடியல்களில் தான் எனக்குள்
அதிகமதிகம் இறகுகள் ஒடிகின்றன
பனிப்போர்வைக் குளிர் வயலில்
நீர் தேக்கிக் குளித்தாலும்
மனசுக்குள் அடுப்பெரிபடுவது
ஏனோ இந்த அதிகாலைகளில் தான்

என் உதரம் சுமந்த அன்பு மகளை
என் ஈரக்கொழுந்தை...
மயில் வர்ணங்கள் தவிர்த்து
அழகு படுத்தித்தான் அனுப்பி
வைத்தாலும்......,



பயமுறுத்துகிறது.......




அவள் செல்லும் அந்தக்
கல்லூரிப் பேருந்தின்

ஏதோவொரு
ஆசனத்தில்
ஒருக்களித்து அமர்ந்தோ - இல்லை
வீதி வெளியிலோ
ஏதோவொரு
சந்து இடுக்கிலோ-அவளை
துரத்தக் காத்திருக்கும்
சின்ன சின்ன
துன்பங்கள்..
பெண்மையைக் குதறும்
குழப்பங்கள்


மாலையில் அவள்
வீடு திரும்பிய பின் தான்
நான் மீண்டும்
உயிர்த்தெழுகின்றேன்.

--- இளைய நிலா---