Wednesday, August 27, 2025

குறும்பாய்......

 


அவள் எழுதும் கவிதைகளைக் கண்டு 

அழுக்காறு அவள் மேலே கொண்டு 

முகநூலுள் சென்று

முணுமுணுத்து நின்று

முகவரியை அழிக்கின்றாள் கொன்று


பஸ்மினா அன்ஸார்

ஓயும் வரை....


வாய்ப்பொன்று

நாற்காலி தந்தால் போதும்

வாலில்லா

நாற்காலி ஆகின்றார்கள்


இமயத்தில் பதவி என்று 

கூறுவார்கள்

சமயத்தில் காலையும்  

வாருவார்கள்


சந்தியிலே வீராப்புக் 

கதைப்பார்கள்

சந்திக்கப் போனால்கை 

விரிப்பார்கள்


உதவுதற்கே பதவியென்று

புழுகுவார்கள்

கதவுகளைப்     பூட்டிவைத்தே பழகுவார்கள்


மனிதம்  பற்றி மணிக் கணக்கில் பேசுவார்கள்

கடிதம் ஒன்றை எழுதித்தர

கூசுவார்கள்


கடமையிலே கண்ணென்று

அலட்டுவார்கள்

கருமபீடம் சென்றவுடன்

விரட்டுவார்கள்


சமூகம் சமூகமென்று

சளப்புவார்கள்

சந்தேகம் தீர்க்கப் போனால்

குழப்புவார்கள்


தூரநின்று தொண்டனைப் போல் 

காட்டுவார்கள்

தொடர்ந்து சென்றால் முகத்தை முழம்

நீட்டுவார்கள்


கோல் எடுத்தால் கென்ரீனில் 

அறுக்கிறார்கள்

கூட்டமொன்றில் என்றுபதில்

இறுக்கிறார்கள்


அழைப்பெடுத்தால் தான் எடுப்பேன்

எனப் பகர்வார்கள்

அடுத்தவாட்டி  எடுக்கும்போது

அதுவும் சொல்லார்கள்

 

வெளியிலெமைக் காணும்போது 

பல் இழிப்பார்கள்

உள்ளே நாம் சென்றுவிட்டால்

முகம் சுழிப்பார்கள்


அதிகாரம் ஆட்சியெல்லாம்

ஓய்ந்திடும் மட்டும்

அரசபணி அறுபதுடன்

முடிவினை எட்டும்


அகந்தையெல்லாம் ஆசனத்தில்

இருக்குமட்டும்

அடங்கிவிடும் இறங்கிவிட்டால்

அவர்கள் கொட்டம்


பஸ்மினா அன்ஸார்

அவதானிப்பு

 


ஆயிரந்தான் செய்தாலும்

அலங்காரம்

அனைத்தையுமே தோற்கடிக்கும்

அகங்காரம்


அர்ப்பணிப்போ டுழைக்கிறது

கடிகாரம்

அதை இயக்கத் தேவையில்லை

அதிகாரம்


அடுக்காது பெண்ணுக்கு 

முன் கோபம்

அவளுக்கே விளைவிக்கும்

அது சேதம்


சுமந்தாலும் குடும்பத்தின்

சுமை தாரம்

சூநிலைக் கைதிதான்

அவள் பாவாம்


பொறுமையாய் இருப்பதனால்

சம்சாரம்

புறம்போக்கும் காட்டலாம்

தன்வீரம்


சுமைதாங்கி என்பதற்காய்

தன்தாரம்

சுமத்துவது தர்மமில்லை

பெரும்பாரம்


உறவுக்குப் பகை என்றும்

சந்தேகம்

உண்டானால் உனக்கில்லை

சந்தோஷம்


ஆகாது ஒருபோதும்

பிடிவாதம்

ஆறாத துயரந்தான்

அதில் மீதம்


உழைத்துண்டு வாழ்வதுதான்

தன்மானம்

அடுத்தவனை எதிர்பார்த்தல்

அவமானம்


நேர்மையான உழைப்பேநல்

பெறுமானம்

நிலைத்திருக்கும் நிஜஉழைப்பின்

வருமானம்


நீதிக்கு மனசாட்சி

ஆதாரம்

நேர்மைக்கு நேராது

சேதாரம்


உள்ளன்பில் கொடுப்பதுவே

பரிசாகும்

எள்ளளவும் செய்யாதே

பரிகாசம்


சகுனங்கள் கை கூடி

வரும் நேரம்

சவாலிலே தோற்றுவிடும்

பரிகாரம்


நீ வாழு உன்கையில்

நிகழ்காலம்

நிச்சயமே இல்லையடா

எதிர்காலம்


பஸ்மினா அன்ஸார்