Wednesday, August 27, 2025

குறும்பாய்......

 


அவள் எழுதும் கவிதைகளைக் கண்டு 

அழுக்காறு அவள் மேலே கொண்டு 

முகநூலுள் சென்று

முணுமுணுத்து நின்று

முகவரியை அழிக்கின்றாள் கொன்று


பஸ்மினா அன்ஸார்

ஓயும் வரை....


வாய்ப்பொன்று

நாற்காலி தந்தால் போதும்

வாலில்லா

நாற்காலி ஆகின்றார்கள்


இமயத்தில் பதவி என்று 

கூறுவார்கள்

சமயத்தில் காலையும்  

வாருவார்கள்


சந்தியிலே வீராப்புக் 

கதைப்பார்கள்

சந்திக்கப் போனால்கை 

விரிப்பார்கள்


உதவுதற்கே பதவியென்று

புழுகுவார்கள்

கதவுகளைப்     பூட்டிவைத்தே பழகுவார்கள்


மனிதம்  பற்றி மணிக் கணக்கில் பேசுவார்கள்

கடிதம் ஒன்றை எழுதித்தர

கூசுவார்கள்


கடமையிலே கண்ணென்று

அலட்டுவார்கள்

கருமபீடம் சென்றவுடன்

விரட்டுவார்கள்


சமூகம் சமூகமென்று

சளப்புவார்கள்

சந்தேகம் தீர்க்கப் போனால்

குழப்புவார்கள்


தூரநின்று தொண்டனைப் போல் 

காட்டுவார்கள்

தொடர்ந்து சென்றால் முகத்தை முழம்

நீட்டுவார்கள்


கோல் எடுத்தால் கென்ரீனில் 

அறுக்கிறார்கள்

கூட்டமொன்றில் என்றுபதில்

இறுக்கிறார்கள்


அழைப்பெடுத்தால் தான் எடுப்பேன்

எனப் பகர்வார்கள்

அடுத்தவாட்டி  எடுக்கும்போது

அதுவும் சொல்லார்கள்

 

வெளியிலெமைக் காணும்போது 

பல் இழிப்பார்கள்

உள்ளே நாம் சென்றுவிட்டால்

முகம் சுழிப்பார்கள்


அதிகாரம் ஆட்சியெல்லாம்

ஓய்ந்திடும் மட்டும்

அரசபணி அறுபதுடன்

முடிவினை எட்டும்


அகந்தையெல்லாம் ஆசனத்தில்

இருக்குமட்டும்

அடங்கிவிடும் இறங்கிவிட்டால்

அவர்கள் கொட்டம்


பஸ்மினா அன்ஸார்

அவதானிப்பு

 


ஆயிரந்தான் செய்தாலும்

அலங்காரம்

அனைத்தையுமே தோற்கடிக்கும்

அகங்காரம்


அர்ப்பணிப்போ டுழைக்கிறது

கடிகாரம்

அதை இயக்கத் தேவையில்லை

அதிகாரம்


அடுக்காது பெண்ணுக்கு 

முன் கோபம்

அவளுக்கே விளைவிக்கும்

அது சேதம்


சுமந்தாலும் குடும்பத்தின்

சுமை தாரம்

சூநிலைக் கைதிதான்

அவள் பாவாம்


பொறுமையாய் இருப்பதனால்

சம்சாரம்

புறம்போக்கும் காட்டலாம்

தன்வீரம்


சுமைதாங்கி என்பதற்காய்

தன்தாரம்

சுமத்துவது தர்மமில்லை

பெரும்பாரம்


உறவுக்குப் பகை என்றும்

சந்தேகம்

உண்டானால் உனக்கில்லை

சந்தோஷம்


ஆகாது ஒருபோதும்

பிடிவாதம்

ஆறாத துயரந்தான்

அதில் மீதம்


உழைத்துண்டு வாழ்வதுதான்

தன்மானம்

அடுத்தவனை எதிர்பார்த்தல்

அவமானம்


நேர்மையான உழைப்பேநல்

பெறுமானம்

நிலைத்திருக்கும் நிஜஉழைப்பின்

வருமானம்


நீதிக்கு மனசாட்சி

ஆதாரம்

நேர்மைக்கு நேராது

சேதாரம்


உள்ளன்பில் கொடுப்பதுவே

பரிசாகும்

எள்ளளவும் செய்யாதே

பரிகாசம்


சகுனங்கள் கை கூடி

வரும் நேரம்

சவாலிலே தோற்றுவிடும்

பரிகாரம்


நீ வாழு உன்கையில்

நிகழ்காலம்

நிச்சயமே இல்லையடா

எதிர்காலம்


பஸ்மினா அன்ஸார்

Wednesday, February 26, 2025

ஏமாற்று வித்தை

 


ஒன்லைன் வியாபாரம்

உண்மையிலே சேதாரம்

என்னையும் மடுத்ததற்கு

இருக்கிறது ஆதாரம்


விலாசத்தை கொடுத்து விட்டு 

வீட்டில் நாம் காத்திருப்போம்

கொண்டு வந்து தந்த பின் தான்

கோட்டை நாம் விட்டிருப்போம்


காசைப் பிடுங்குதற்கு 

கண்ணையும் பிடுங்குவார்கள்

மோசடிகள் செய்து பணம்

முழுவதையும் சுரண்டுவார்கள்


எடுப்பாய் விளம்பரத்தை

இலத்திரனில் சேர்ப்பார்கள்

எல்லோர் மனங்களையும்

இலகுவாக ஈர்ப்பார்கள்


கல்லா நிறைப்பதற்கு

கங்கணம் கட்டுவார்கள்

கண்களைக் கவரும் வண்ணம் 

காட்சிகளை கொட்டுவார்கள்


மலிவு போல் விளமம்பரத்தில்

மாதிரியை காட்டுவார்கள்

மந்திரம் போல் வேறு ஒன்றை

மடித்துக் கை நீட்டு வார்கள்


பெரிய பொதிகளைப் போல்

பிரபல்யப் படுத்துவார்கள்

பிரித்ததனைப் பார்க்கும் வர

பிரமையை ஏற் படுத்துவார்கள்


நூற்றுக்கும் குறைந்த விலை

நுகர்வுப் பொருட்களுக்கு

ஆயித்தை நம்மிடத்தில்

அபகரித்து விடுகிறார்கள்


பாவம் நுகர்வோர்கள்

பாதிக்கப் படுகிறார்கள்

சோ காட்டும் ஒன்லைனால்

சோதிக்கப் படுகிறார்கள்


ஏமாந்து போவதற்கு

இலகு வழி இருக்குமென்றால்

ஒன்லைனைத் தவிர வேறு

ஒரு வழியும்  இல்லை இல்லை 


பஸ்மினா அன்ஸார்

பழமையும் புதுமையும் *************************

 


வாழ்க்கைப் படிக்காய்

வாசற் படி தாண்டிய

வரலாறு காலாவதியாகிவிட்டது

            *-*-*


வீட்டுக்குள் இருந்து கொண்டு 

வேதனம் பெறுமளவு

விஞ்ஞானம் வந்து விட்டது 

              *-*-*


தோதுக்கு ஏற்றாற் போல்

தொழில் செய்யும் வகையாக 

தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது

              *-*-*- 


இருப்பினும் கூட

இன்றைய உலகில் எல்லாம் 

இயந்திரம் ஆகிவிட்டது 

             *-*-*-


ஆதலினால் ...


அலுவலகம் போன்று 

ஆளுமை வளர்க்க 

ஆளணி கிடைப்பதில்லை 

              *-*-*-


இரவும் பகலும்

இணையத்தோடிருப்பதனால்

உறவுகள் பாவம்

உயிர்ப்பிக்கப் படுவதில்லை 

          *-*-*-*


அன்றாடம் மனிதன்

அலைந்து பெறுகின்ற

அனுபவம் கிடைப்பதில்லை 

            *-*-*-


வெயிற் பால் குடித்து

வேலைகள் செய்துடல்

வியர்வை சுரப்பதில்லை 

              *-*-*-


ஒரேயோர் இடத்தில் 

உட்கார்ந்திருப்பதனால்

உடற்பயிற்சி நடப்பதில்லை

           *-*-*-*


நாள் தோறும் வீட்டுக்குள் 

நகராமல் இருப்பதனால்

நடைப் பயிற்சி கிடைப்பதில்லை

               *-*-*-


பழைமைகள் முழுதிலும்

பராமுகம் கொண்டால் நம்

பயணத்தில் வெற்றியில்லை

                *-*-*-


பஸ்மினா அன்ஸார்

Tuesday, February 11, 2025

தந்தை

 



விருட்சத்தின் ஆதாரம் வேர்

குடும்ப விருட்சத்திலே  

தந்தை  என்று அதற்குப் பேர்


மண்ணுக்குள்ளிருந்து

மரத்தினது பெரும் சுமையை

தன்னந் தனியாகத்

தாங்குவது அதன் வேர்தான்


பென்னம் பெரு மரத்தையும்

பிடித்து  நிறுத்துவது

வேரன்றி வேறன்று


பகலிரவாய்  மரத்தின்

பாரத்தைத் தாங்குவது வேர்

நிழல் பரப்பி என்ற

நாமத்தைத் வாங்குவது இலை


உள்ளே இருந்து 

உருகுவது வேர்

வெளியே தோன்றி

விலாசம் பெறுவது இலை


பாவம் வேருக்கு

பாராட்டுக் கிடையாது 

இலைக்குத் தான் பாராட்டு

எதிர்க் கருத்து இருக்காது


வேரின் பயனை நாம்

விவரித்துக் கூறினாலும்

இலைக்குரிய மரியாதை

வேருக்குக் கொடுப்பதில்லை


வேரும் இலையும்

விருட்சத்தின் அரை எனினும்

வேரே இலையைவிட

வினைத் திறனில் சிறந்ததாகும்


வேரின்றி ஒருபோதும்

விருட்சம் கிடையாது

ஆதலினால் நாமும் 

அகம் கொள்வோம் வேரையும்தான்.


பஸ்மினா அன்ஸார்

Saturday, October 5, 2024

அன்பின் ஆசான்களே...!!


அகரம் கற்று

சிகரம் தொட

அச்சாணியாய் சுழலும்

 அனைத்து ஆசிரிய

 பெருந்தகைகளுக்கும்

இந்தக் கவிதை

 இன்றிலிருந்து

  ஒரு ஆற்றுப்படை!


 முட்களுக்கிடையில் 

சிக்கித் தவித்த

 இந்த சின்ன மலர்களை

 உங்கள் மூச்சுக்காற்றினால் 

உயிர் பெறச் செய்த 

அன்புள்ளங்களே....


எத்தனை அன்பு!

எத்தனை அரவணைப்பு!

எத்தனை அறிவுரை!


உங்கள் கம்பின்

 சிறு பங்கும்

 உங்கள் அன்பின் 

பெரும் பங்கும்

 பதம் பார்த்ததால்

 முகை வெடித்த 

மொட்டுக்களல்லவா

நாங்கள் ...


ஆமாம் 


சிதைக்கப்படாத கற்கள் சிலைகள் ஆவதில்லை!


 தீயில் சுடாத தங்கம் அணிகலன் ஆவதில்லை!!


 அடித்துத் துவைக்காத துணிகள் 

வெளுப்பதும்  இல்லை!!


 பிழிந்து எடுக்காமல்

 கரும்பு சர்க்கரை ஆவதுமில்லை!!


 அதுபோலத்தான்....


 ஆசிரியர்கள் நீங்கள்

 வழி நடவாமல்

 நாம் ஆன்றோர் ஆவதில்லை!!     


சிறு தவறுகள் நாம் செய்ய


 அன்பால் அறிவுறுத்தி


 அழகாய் கற்றுத் தந்த

 அற்புத உள்ளம் கொண்டவர்களே....!


 ஒரு நாள் நீங்கள் வராவிட்டாலும் 

தவித்து வாடிப் போகிறோம் நாங்கள்...


காலை பனித்துளி எல்லாம் 

நம்மிடம் காரணம் கேட்கின்றன 

யாரைத் தேடி அலைந்து 

சோர்கிறீர்கள் என்று ...??



ஆமாம் ...

குடும்பம் தாண்டிய குழந்தைகளின் 

முதல் சமூக உறவு

 நீங்கள் தான்!.


அலைபாயும் 

மனசுகளை 

அடக்கிவிடும்

 உங்கள் அதட்டல்கள் !!



கவனச் சிதறல்களை

 பறந்து வந்து

 முறியடிக்கும் 

உங்கள் ஒற்றைப் பார்வை...!!


முதல் பாராட்டு


 முதல் பரிசு


முதல் தோல்வி


முதல் தோள் கொடுப்பு


என அனைத்திலும் 

 நீங்கள் இருக்கிறீர்கள் ...!!

மொத்தத்தில் 

மழலைகள் எங்களின்

 முதல் காதல் 

நீங்கள் தான் !!


குறும்புகள் ரசித்து


 குழப்பங்கள் தீர்த்து


 தவறுகள் திருத்தி


 திறமைகள் போற்றி


 வெற்றிக்கு விழா எடுத்து


 தோல்விக்கு தோள் கொடுத்து 


வருடம் முழுதும் 

வகுப்பறைக்குள் சுமந்து


 வாழ்த்தி வழி அனுப்பும் 

ஆசிரியர்கள்  நீங்கள்


எமக்கு வாடகை பெற்றோர்களே...!!


உமது கைகளால் செதுக்கப்பட்டு 

உமது அன்பினால் அரவணைக்கப்பட்டு

உமது விரல்களால் பட்டை தீட்டப் பட்ட


 சின்னப் பூக்களின்

இதய அன்பின் வெளிப்பாடு....


இந்தக்கவிதை !


உங்களுக்காய் கவி படிக்க

 நினைக்கையில்.... 

வார்த்தைகள் இருந்தும்


 மௌனமாகிப்

போகிறேன்!!

எனவே.....

ஆசிரியர் பெருந்தகைகளே....

உங்கள் தினத்தில் உங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்



 நீங்கள்  சென்ற இடமெல்லாம் வென்ற இடமாகவும்..


நிலையான சுகத்துடன் நீடூழி வாழ்ந்திடவும்


 உங்களுக்காய் வல்லவன் அல்லாஹ்வை இரு கரமேந்தி  பிரார்த்தித்து

விடை பெறுகிறேன்.!!


நன்றி! !


இளையநிலா

பஸ்மினா அன்ஸார்

06/10/2024