Wednesday, February 26, 2025

ஏமாற்று வித்தை

 


ஒன்லைன் வியாபாரம்

உண்மையிலே சேதாரம்

என்னையும் மடுத்ததற்கு

இருக்கிறது ஆதாரம்


விலாசத்தை கொடுத்து விட்டு 

வீட்டில் நாம் காத்திருப்போம்

கொண்டு வந்து தந்த பின் தான்

கோட்டை நாம் விட்டிருப்போம்


காசைப் பிடுங்குதற்கு 

கண்ணையும் பிடுங்குவார்கள்

மோசடிகள் செய்து பணம்

முழுவதையும் சுரண்டுவார்கள்


எடுப்பாய் விளம்பரத்தை

இலத்திரனில் சேர்ப்பார்கள்

எல்லோர் மனங்களையும்

இலகுவாக ஈர்ப்பார்கள்


கல்லா நிறைப்பதற்கு

கங்கணம் கட்டுவார்கள்

கண்களைக் கவரும் வண்ணம் 

காட்சிகளை கொட்டுவார்கள்


மலிவு போல் விளமம்பரத்தில்

மாதிரியை காட்டுவார்கள்

மந்திரம் போல் வேறு ஒன்றை

மடித்துக் கை நீட்டு வார்கள்


பெரிய பொதிகளைப் போல்

பிரபல்யப் படுத்துவார்கள்

பிரித்ததனைப் பார்க்கும் வர

பிரமையை ஏற் படுத்துவார்கள்


நூற்றுக்கும் குறைந்த விலை

நுகர்வுப் பொருட்களுக்கு

ஆயித்தை நம்மிடத்தில்

அபகரித்து விடுகிறார்கள்


பாவம் நுகர்வோர்கள்

பாதிக்கப் படுகிறார்கள்

சோ காட்டும் ஒன்லைனால்

சோதிக்கப் படுகிறார்கள்


ஏமாந்து போவதற்கு

இலகு வழி இருக்குமென்றால்

ஒன்லைனைத் தவிர வேறு

ஒரு வழியும்  இல்லை இல்லை 


பஸ்மினா அன்ஸார்

பழமையும் புதுமையும் *************************

 


வாழ்க்கைப் படிக்காய்

வாசற் படி தாண்டிய

வரலாறு காலாவதியாகிவிட்டது

            *-*-*


வீட்டுக்குள் இருந்து கொண்டு 

வேதனம் பெறுமளவு

விஞ்ஞானம் வந்து விட்டது 

              *-*-*


தோதுக்கு ஏற்றாற் போல்

தொழில் செய்யும் வகையாக 

தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது

              *-*-*- 


இருப்பினும் கூட

இன்றைய உலகில் எல்லாம் 

இயந்திரம் ஆகிவிட்டது 

             *-*-*-


ஆதலினால் ...


அலுவலகம் போன்று 

ஆளுமை வளர்க்க 

ஆளணி கிடைப்பதில்லை 

              *-*-*-


இரவும் பகலும்

இணையத்தோடிருப்பதனால்

உறவுகள் பாவம்

உயிர்ப்பிக்கப் படுவதில்லை 

          *-*-*-*


அன்றாடம் மனிதன்

அலைந்து பெறுகின்ற

அனுபவம் கிடைப்பதில்லை 

            *-*-*-


வெயிற் பால் குடித்து

வேலைகள் செய்துடல்

வியர்வை சுரப்பதில்லை 

              *-*-*-


ஒரேயோர் இடத்தில் 

உட்கார்ந்திருப்பதனால்

உடற்பயிற்சி நடப்பதில்லை

           *-*-*-*


நாள் தோறும் வீட்டுக்குள் 

நகராமல் இருப்பதனால்

நடைப் பயிற்சி கிடைப்பதில்லை

               *-*-*-


பழைமைகள் முழுதிலும்

பராமுகம் கொண்டால் நம்

பயணத்தில் வெற்றியில்லை

                *-*-*-


பஸ்மினா அன்ஸார்

Tuesday, February 11, 2025

தந்தை

 



விருட்சத்தின் ஆதாரம் வேர்

குடும்ப விருட்சத்திலே  

தந்தை  என்று அதற்குப் பேர்


மண்ணுக்குள்ளிருந்து

மரத்தினது பெரும் சுமையை

தன்னந் தனியாகத்

தாங்குவது அதன் வேர்தான்


பென்னம் பெரு மரத்தையும்

பிடித்து  நிறுத்துவது

வேரன்றி வேறன்று


பகலிரவாய்  மரத்தின்

பாரத்தைத் தாங்குவது வேர்

நிழல் பரப்பி என்ற

நாமத்தைத் வாங்குவது இலை


உள்ளே இருந்து 

உருகுவது வேர்

வெளியே தோன்றி

விலாசம் பெறுவது இலை


பாவம் வேருக்கு

பாராட்டுக் கிடையாது 

இலைக்குத் தான் பாராட்டு

எதிர்க் கருத்து இருக்காது


வேரின் பயனை நாம்

விவரித்துக் கூறினாலும்

இலைக்குரிய மரியாதை

வேருக்குக் கொடுப்பதில்லை


வேரும் இலையும்

விருட்சத்தின் அரை எனினும்

வேரே இலையைவிட

வினைத் திறனில் சிறந்ததாகும்


வேரின்றி ஒருபோதும்

விருட்சம் கிடையாது

ஆதலினால் நாமும் 

அகம் கொள்வோம் வேரையும்தான்.


பஸ்மினா அன்ஸார்