Tuesday, December 17, 2013
Wednesday, December 11, 2013
கவியரசி (உருவகம்)
மாரி கால குளிரினை ரசித்துக்கொண்டே தன் இயற்கை பந்தங்களுடன் விளைடாடி மகிழ தன் சேலைக்கு மேலால் போர்வையொன்றை போர்த்தியவளாக நந்தவனத்தை வந்தடைந்தாள் கவியரசி. அவளைக்கண்டதும் வாடிப்போய் மறுபுறம் திரும்பிக்கொண்டது ரோஜா மலர். ''மலரே.....கோபமென்ன...உன்னில் கமழும் நறுமணத்தை,உன் இத்ழ்களின் மென்மையை,எல்லாவற்றுக்கும் மேலாக என் உள்ளம் கவர்ந்த உன்னழகைப்பாடஎனக்கோர் அவகாசம் தருவாயா...?'' மலரோ குனிந்த தலை நிமிராமலே ''கவியரசி... ஒரு நாள் வாழ்க்கை வாழும் என்னைப்பாடுவதில் உனக்கென்ன லாபம்..'' எனகுரல் தடுமாறக்கேட்டது,
''ஒரு நாளே வாழ்ந்தாளும் உன்னைப்போல் இனிமையாகவும்,செழுமையாகவும், பூஜையறை பூர்வீக சொத்தாகவும்,வைபவங்களில் முன்னணி வகிக்கும் பிரதம அதிதியாகவும்.மணப்பெண் கூந்தலில் மங்கா ஜோதியாகவும்.மணவறையில் மணம் வீசும் தாரகையாகவும்,எல்லையிலா மானிட தேவைகளுக்கு மனமுவந்து உயிரை அர்ப்பணிக்கும் உன்னைப்பாட எனக்கு லாபம் வேண்டுமா...? என இனிமையாக கேட்க ரோஜா பெருமிதம் கொண்டு கவியரசிக்கு தலை வணங்கியது.
மெதுவாக அவ்வழியே வந்த தென்றலுக்கு இவ்வுரையாடல் எட்டிவிட,தென்றலோ அவ்விடத்தை விட்டு நகர முனைந்தது.
''ஓ... தென்றலே எங்கே நழுவுகிறாய்...உன் ஸ்பரிசத்தோடு நந்தவனத்தில் உலா வத்தானே நான் இங்கு வந்தேன்... என் மேலுனக்கென்ன சீற்றம்..?'' என்றாள்.
''புயலாக மாறும் தன்மை எனக்கிருக்கும் போது...நீ ஏன் என் தீண்டலை எதிர்பார்க்கிறாய்'', என்று அமைதியாய் பதிலளித்தது தென்றல்.
''இயற்கைக்கு செம்மையளிக்கும் இனிய ராகம் நீ.உலகில் உவக்காத செயல்கள் இடம் பெறும் போது சீற்றம் கொள்கிறாய்.. அதில் என்ன வந்தது.. ஒரு சிறந்த கவிஞனின் கவிச்சிறகை தட்டியெழுப்பக்கூடிய ஆற்றல் கொண்ட உன்னையும் நான் பாட வேண்டும். சம்மதம் தானே..? என்ற கவியரசியை மென்மையாய் வருடி தன் சம்மதத்தை ச்சொன்னது தென்றல். தென்றலின் ஸ்பரிசத்தால் குளிர்ந்து போன கவியரசி மலரை நோக்கி.. ''ரதி தேவியே, உன் ரீங்கார நாதன் எங்கே..'' என்று கன்களை சிமிட்டிக்கொண்டே கேட்க,. இதோ வந்து விட்டேன்.. ஏன் என்னைப்பாட மாட்டாயா.. என்று முணங்கியவாறு காதுக்குள் ரீங்காரித்தது வண்டு.
ஓ.. வாங்க.. மன்மதரே...உங்களைப்பாடாவிட்டால் ரதிதேவி என்னுடன் கோபித்துக்கொள்வாரே அதனால் உங்களையும் பாடித்தான் ஆக வேண்டும் என ரோஜாவை பார்த்து கண்ணடித்தாள்.
அவர்களின் அழகான உரையாடல் நடுவே எதிர்பாறாத விதமாய் படீர், படீர் என்று மின்னல் வெட்டியது.
ஒரு சந்தோசப்பொழுதில் இடித்ததை கேட்டு சீற்றம் கொண்ட கவியரசி.. மின்னலை நோக்கி ''ஏன் இந்த ஓரவஞ்சனை..'' என்று அதட்டினாள்.
'' நாங்கள் தான் பெய்தும் கெடுப்போம்... பெய்யாமலும் கெடுப்போம்..'' என்று நம்மை மட்டும் ஒதுக்கி விட்டு ஏனைய அனைத்தையும் பாடி ஓர வஞ்சகம் செய்தது நீயா... நானா..?என்று ஆவேசமாய் கதறியது மேகம்.
நிலைமையைபுரிந்து கொள்ள்ள முடியாத கவியரசி.. ''அழுதது போதும் நிறுத்துங்கள்.. யாரிப்படியெல்லாம் சொல்வது...பழங்காலக்காதலர்களின் தூதுவனல்லவா நீங்கள், பிரிவினை இல்லா வானில் சுதந்திர ஜீவியே... உங்களையும் பாடத்தான் போகிறேன்..'' எனக்கூறி.... தன் சேலைக்கு மேலால் போர்த்தியிருந்த சால்வையை தரையில் விரித்து அமர்ந்தாள்.
அனைத்து ஜீவராசிகளும் அவள் கவிதைக்காய் செவி திறந்து காத்துக்கிடக்க எங்கிருந்தோ வந்த விசும்பல் சத்தம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. குரல் வந்த திசை திரும்பியார்கள் அதிர்ந்தார்கள்.
அங்கே ஓர் கருங்கல் விசும்பிக்கொண்டிருந்தது.
தேவதையே நீ என்னை பாடா விட்டாலும் பரவாயில்லை உன் போன்ற ஒரு கவிக்குயிலை சுமக்கும் பாக்கியத்தையாவது எனக்குத்தர வேன்டும் நீ.கல் என்று என்னை நீயும்ஒதுக்கி விடாதே. தரையில் அமர்ந்து கவி பாடாது என்னிலமர்ந்து பாடு.'' என்றது..
இதைக்கேட்டவள் . ''கல்லே என்னை மன்னித்துக்கொள்..நான் உன் மேல் அமர முடியாது.. ஏனென்றால் கல்லுக்குள் ஈரம் என்றுன்னையும் நான் பாடவேண்டுமல்லவா...என்று கூற,கல் கல...கல...என்று சிரித்தது.அதனுடன் சேர்ந்து ஏனையஇயற்கை பந்தங்களும்
நாதமிசைக்க ஓரழகிய கவிதையை பாடினாள் கவியரசி.
மண்ணிலே பிறந்திடும் பூக்கள்
மாளிகையிலும் வரவேற்புக்கள்
செல்வம் வரியோர் பேதம்
தென்றலுக்கில்லை எப்போதும்
இகத்தினில் மலர் தாவும் வண்டு
இனம் பரவ உதவுதல் உண்டு
மேகமோ நிறத்தினில் கறுப்பு
மண்ணுக்குள் கொடையில் சிறப்பு
அன்னை போல் தாங்கிடும் கல்
அதனிடம் படிப்பினை கல்
Tuesday, December 10, 2013
பாக்கியசாலி
என் வாழ்வில்
வளம் சேர்க்க
நாளும் பொழுதும்
பரிமளம் தரும்
பாசப்பூக்கள்
ஆமாம்-என்னை
பெற்றவர்கள்
என் கண்ணில்
தூசு விழ
அவர் கண்கள்
நீர் கொட்டும்
என் அங்கம்
நோய் கண்டால்
ஆவி துடிக்க
வேதனை கொள்வர்
நோய் தீர்க்க
மருத்துவர்கள்
கையில் தானா
என் பிராணம்
தொங்குகிறது?
இல்லவே இல்லை.....
என் உயிருக்கு
ஊட்டம் அளிப்பது
பெற்றவர்கள்
பொழிகின்ற
பாச மழைதான்!
பூமியில் நான் ஒரு
பாக்கியசாலி!!
-இளைய நிலா
Monday, December 9, 2013
சுருதி சேறாத ராகம்
''அக்கா நான் சத்தியமாக ரகுவைக் காதலிக்கல..காதலிக்கல... காதலிக்கல.... நம்ம தூய நட்ப மத்தவங்களப்போல நீயும் கொச்சைப்படுத்தாத..புண்ணியம் கிடைக்கும் ப்ளீஸ்...'' கெஞ்சும் தோரணையில் ஆவேசமாக கத்தினாள் ஸ்ருதி.
''ஸ்ருதி... சும்மா கத்தாத...உங்க ஃப்ரென்ட்ஷிப்ப பத்தி நல்லா தெரியுமங்கறதால தான் சொல்றேன்.. நல்லா கேட்டுக்கோ.உங்க ரெண்டு பேருக்கிடயிலயும் நல்ல அன்டஸ்டேன்டிங் இருக்கு.. உனக்கொரு தலை வலின்னாலே துடிச்சுப்போற அவன்.. அவனுக்கொரு பிரட்சினைன்னா பரிதவிச்சுப்போற நீ...இரவு பகலென்றில்லாம ஒருவர் பற்றி ஒருவர் நினைப்பதும்... தவிப்பதும்...நான் அறியாததல்லடீ.
நீ சாப்பிட்டயா..க்லாஸ் போனியா...தூங்கிட்டியா என நொடிக்கொரு தரம் ஆராயும் அவன் அன்புக்கு பாத்திரமாகும்... பாக்கியம் உன் தலையில் எழுதில்லன்னா நாமென்ன பண்ண முடியும்... யோசிசிசிப்பாரு.... உன் பிடிவாதம், உன் ஸ்ட்ரெங்த்,உன் வீக்னஸ், உன் தேவை,உன் சந்தோசம்..... இப்படி உள்ளூர உன்னபத்தி தெரிஞ்சவன் ரகு...நீயே ஒரு வட்டத்த கீறி அதுக்குள்ள உட்காந்துகிட்டு அத விட்டு வெளியே வற மாட்டேன்னு அடம் பிடிக்கிறே... இதுக்கு மேல நான் உன் விசயத்துல தல இடறது எனக்கும் நல்லதில்ல, ஏன்னா உண்மயா தூங்குறவள எழுப்பலாம்....தூங்குறாப்போல நடிக்கிறவள எழுப்ப முடியுமா...ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ,பாலத்தான் கொடுக்க முடியும் பாக்கியத்த கொடுக்க முடியாது.. எல்லாம் கை மீறிப்போன பின்ன எங்காவது ஒரு குட்டிச்சுவரிருந்தா போய் முட்டிக்கோ.
இனி நீயாவது உன் வாழ்க்கையாவது... நான் வாறேன்...'' பட படவென்று கூறிவிட்டு ...சட்டென்று அகன்றாள் .
தினமும் தோழியர் கூறும் பல்லவியை தான் அக்காவும் பாடினாள் என்றாலும்...இன்று அவளுக்குள்ளாயிரம் பட்டாம் பூச்சுக்கள் பறக்க ஆரம்பித்தன...
''ச... இத்தனை நாளும் எனக்கு தோணல்லயே...அக்காவே இத்தனை சொல்லும் போது...இந்தஉண்மையான நட்பு காதல் எனும் பரிணாமம் பெற்றால்... நிச்சயம் கல்யாண மேடையில் தானே அரங்கேற்றம் நிகழும்.இனியும் வேண்டாம் இந்த வீண் பிடிவாதம்,ரகு.. பாவம்டா.. நீ, எத்தனை தடவை உன் காதலை சொல்ல முயன்றிருக்கிறாய்... உள்ளுக்குள் மானசீகமாய் காதலை வளர்த்துக்கொண்டு என் நட்பு சென்டிமென்டுக்காய் எத்தனை முறை தான் மெளன போராட்டம் நிகழ்த்தியிருப்பாய்.. இன்றோடு உன் மெளனம் கலையட்டும்..இத்தனை நாளும் நீ தவிக்க நானே காரணம்...உன் ரெண்டு வருஷ தவிப்பு இந்த ஒரு நிமிஷ தவிப்பை விட மேலானது தானே...ஸாரிடா....''
அவள் எண்ண அலைகளை ஆயிரம் புல்லாங்குழல் கொண்டும் மீட்ட முடியாது என்பதாய் உணர்ந்தாளவள்.
அவனுக்கு நல்ல தோழியாய்....சிறந்த மனைவியாய்...ஒரு தாயாய்..சில சந்தர்ப்பங்களில் சகோதரியாய்... அவ்வப்போது குழந்தையாய்.....அவனையும் அவன் உடமைகளையும் ஆழும் எஜமானியாய்...அய்யோ... நினைக்கும் போதே..இத்தனை சுகமாக இருக்கிறதே...கடவுளே..
சிறகடித்துப்பறந்த மனசை சிரமப்பட்டு சிறைப்படுத்தியவளாய் ரகுவின் தொலைப்பேசி எண்களை சுழற்றினாள்.
'ஹாய் ஸ்ருதி... உனக்கு ஆயுசு நூத்தியொன்னும்மா.. சத்தியமா இப்ப கூட உன்ன தான் நெனச்சுட்டிருந்தேன். நீயே லைன்ல வந்தட்டே.. '
'அப்படடியா... ஏன் என் அனுமதி இல்லாம என்ன நெனச்சீங்க...' போலியாய் சிணுங்கினாள்.
''ஹ.... இது நல்லா இருக்கே..என்னிளுள்ளவள நினைக்க நான் ஏன் உன்ன கேட்கனும்...''
அவள் சந்தோசத்தால் முகம் சிவந்து போனதை தொலைபேசியூடாக அவன் அறிய நியாயமில்லை.
அவன் தொடர்ந்தான் ''ஸ்ருதி ஒரு விசயம் பேசணும்.....'
'' ம்ம் சொல்லுங்க....."
''உனக்கு தெரியுமா... எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா அது நீ ஒருத்திதான்னு எங்கம்மா ஒத்த கால்ல நின்னிருந்தாங்க..''
'ம்ம்.............................''
''பயப்புடாத ஸ்ருதி எனக்கு தெரியும்... உனக்கு இந்த காதல் கல்யாண சமாச்சாரம் எல்லாம் பிடிக்காதுன்னு...அதனால தான் அம்மாக்கு புரியுற மாதிரி எடுத்துச்சொன்னேன்...
''..........................................''
''இந்த மாதிரி எண்ணம் இருக்கிறது தெரிஞ்சா ஸ்ருதி என்கூட பழகுவதையே நிறுத்திடுவாம்மா..உன் கற்பனைக்குதிரைக்கு கடிவாளம் போடுன்னு...''
அம்மா மூன்று நாட்களா புலம்பினாங்க... ரொம்ப யோசிச்சு... ப்ராயத்தனப்பட்டு... எங்க அத்த பொண்ணு ப்ரமிளாவுக்கும் எனக்கும் நிச்சயம் பன்னிட்டாங்க... எப்படி என் சாமர்த்தியம்....??
''..........''
''ஸ்ருதி... இனிமேல் என் வாழ் நாள் பூராவும் உன் ப்ரென்ட் ஷிப் எனக்கு கிடைக்கும் தானே..... காலத்துக்கும் என் தோழியாய் நீ எனக்கு வேனும் ஸ்ருதி...'' கெஞ்சினானவன்.
நீண்டதாய் ரகு பேசி முடிக்க அந்த வார்த்தைகள் அவளது தலையில் இடியாய் வீழ்ந்தது.
சற்று முன் அவள் மீட்டி அழகு பார்த்த இதய வீணை அவள் இதயம் போலவே நரம்பறுந்து கீழே விழுந்தது.
'இளைய நிலா'
ஃபஸ்மினா அன்ஸார்.
அம்மா
சிங்காரங்கள்
நானும் செய்கையில்...
எனை கட்டியனைத்து
நெட்டி முறித்து
தழுவிக்கொள்ளுவாய்...
நீ உடுத்தி அவிழ்த்த
சேலை சுற்றித்
திரியும் போதிலே
ஒளிந்து நின்று
பார்த்து ரசித்து
உச்சுக்கொட்டுவாய்
மழையில் நானும்
நனைய உந்தன்
குழையும் நடுங்குமே
விலையில்லாத செல்வமே
என அள்ளி அனைக்குமே
என் பிஞ்சு கால்களையும்
கண்ணில் ஒற்றி
கொஞ்சி மகிழ்வாய்.
வஞ்சமில்லா
பாசம் தந்து
நெஞ்சம் மகிழ்வாய்
உனை எண்ணும் போது
எந்தன் மனம் கர்வம் கொள்ளுதே
இந்த தூய்மையான
தாய்மையதை
போற்றிப்பாடுதே....
-இளைய நிலா
Sunday, December 8, 2013
ஸ்னேகம்
நம்
நெஞ்சுக்குள்
நாதஸ்வரமாய்
ஊடலால் நாமே நமை
சாடி வாடும் போது
நமக்காய்
உண்மை நட்புக்காய்
நம்மிடம்
யாசிப்போருக்கு
யோசனை சொல்வதாய்
நல் நட்பை தொடர
ஆசியும் செய்வதாய்
நமை வேவு பார்க்கும்
ஜனங்களுக்கு அது
ஜன்னல் திறப்பதாய்
நம் நட்பின் உயர்வை
உணரவும் செய்வதாய்
நமை வதைப்போர்
மனதில் நல் விதை
விதைப்பதாய்...
தூற்றுவோருக்குள்ளே
நட்பின் நாற்றை
நட்டும் வைப்பதாய்
நாளை ஊரே
நமை
போற்றிப்பாடும்
போது.......
அது கண்டு நம் ஸ்னேகம்
இன்னும் நூறாண்டுகள்
நலமாக வாழும்!!!
--இளைய நிலா
Saturday, December 7, 2013
Subscribe to:
Posts (Atom)









