வாழ்க்கைப் படிக்காய்
வாசற் படி தாண்டிய
வரலாறு காலாவதியாகிவிட்டது
*-*-*
வீட்டுக்குள் இருந்து கொண்டு
வேதனம் பெறுமளவு
விஞ்ஞானம் வந்து விட்டது
*-*-*
தோதுக்கு ஏற்றாற் போல்
தொழில் செய்யும் வகையாக
தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது
*-*-*-
இருப்பினும் கூட
இன்றைய உலகில் எல்லாம்
இயந்திரம் ஆகிவிட்டது
*-*-*-
ஆதலினால் ...
அலுவலகம் போன்று
ஆளுமை வளர்க்க
ஆளணி கிடைப்பதில்லை
*-*-*-
இரவும் பகலும்
இணையத்தோடிருப்பதனால்
உறவுகள் பாவம்
உயிர்ப்பிக்கப் படுவதில்லை
*-*-*-*
அன்றாடம் மனிதன்
அலைந்து பெறுகின்ற
அனுபவம் கிடைப்பதில்லை
*-*-*-
வெயிற் பால் குடித்து
வேலைகள் செய்துடல்
வியர்வை சுரப்பதில்லை
*-*-*-
ஒரேயோர் இடத்தில்
உட்கார்ந்திருப்பதனால்
உடற்பயிற்சி நடப்பதில்லை
*-*-*-*
நாள் தோறும் வீட்டுக்குள்
நகராமல் இருப்பதனால்
நடைப் பயிற்சி கிடைப்பதில்லை
*-*-*-
பழைமைகள் முழுதிலும்
பராமுகம் கொண்டால் நம்
பயணத்தில் வெற்றியில்லை
*-*-*-
பஸ்மினா அன்ஸார்
No comments:
Post a Comment